இலங்கை இனப் பிரச்சனை : எதிர்பார்தத திருப்பமே!
ஜனவரி 8, 2008
இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தையின் மூலம் நிரந்தரத் தீர்வை எட்ட உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்க அரசு விலகிக்கொள்ளவதாக அறிவித்திருப்பது, இனப் பிரச்சனைக்கு ராணுவ வழியில் தீர்வு காண வேண்டும் என்கின்ற அந்நாட்டு அரசின் (நீண்ட கால) உள் திட்டத்தின் நிதர்சனமான வெளிப்பாடாகும்.
சிறிலங்க அரசின் இந்த முடிவு ஏதோ தற்பொழுது அங்கு தீவிரமடைந்துள்ள மோதலின் எதிரொலியானது அல்ல. மாறாக, எந்த அன்னிய நாடுகளின் தலையீடுமின்றி, “இராணுவ பலத்தைக் கொண்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்” என்ற சிங்கள மேலாதிக்க கொள்கையைக் கொண்ட அரசியல் எண்ணத்தின் வெளிப்பாடே சிறிலங்க அரசின் இந்த முடிவாகும்.
இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நார்வே தலைமையிலான சர்வதேச கூட்டமைப்பு முயற்சி மேற்கொள்ளத் துவங்கிய நாள் முதலே அதனை தொடர்ந்து எதிர்த்துவரும் ஜனதா விமுக்தி பெரமுணா, ஜாதிக ஹேல உருமயா உள்ளிட்ட தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சே, அமைதிப் பேச்சு வார்த்தையில் நாட்டம் காட்டவில்லை. ராணுவ பலத்தை அதிகரிப்பதிலும், விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதிலுமே கவனம் செலுத்தினார்.
“விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டிய பிறகே இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்” என்று ராஜபக்சேயின் இளைய சகோதரரும் அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே பேசியதெல்லாம் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் குரல்தான் என்பது இலங்கைப் பிரச்சனையை தொடர்ந்து கவனிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.