மக்களின் கருத்துரிமை மறுக்கப்பட்டுள்ளது!
செப்டம்பர் 12, 2007
நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் எடுத்து வைக்கப்படும் கருத்துக்களையும், வாதங்களையும் முழுமையாக அறிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் அரசின் நடவடிக்கைகள் சரியா? தவறா? என்பதை முடிவு செய்யும் உரிமையை ஜனநாயகம் வாக்களிக்கும் மக்களுக்கு அளிக்கிறது.
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கக்கூடிய அரசின் முடிவுகள் அனைத்தும் சரியா? தவறா? என்பதனை உரசிப் பார்க்கும் இடம் ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் நாடாளுமன்றமாகவே இருக்கின்றது. ஜனநாயகத்தின் உயிர்த் துடிப்பாக நாடாளுமன்றம் இருப்பதால்தான் ஜனநாயக அரசியல் அமைப்பை “நாடாளுமன்ற ஜனநாயகம்” என்று அழைக்கப்படுகிறது.
ஆக, ஒவ்வொரு பிரச்சனையிலும் அரசு, எதிர்க்கட்சிகள் இவ்விரு தரப்பையும் சாராத மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் எடுத்து வைக்கும் கருத்தைக் கொண்டும், அதற்கு அரசின் சார்பாக பிரதமரோ, அமைச்சரோ அளிக்கும் பதிலைக் கொண்டும் மக்கள் கருத்து தெளிவுபெற வழிவகுக்கிறது நாடாளுமன்ற நடவடிக்கைகள்.
நமது நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சிகள், மற்ற கட்சிகள் ஆகியவை ஏற்படுத்தும் அமளியின் காரணமாக ஒவ்வொரு நாளும் தள்ளிவைக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு இயங்கவிடாமல் தடுக்கப்பட்டு வருவது வருத்ததிற்குரியது.