Andrew symondsஅகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒரு நாள் போட்டியின்
போது தன்னை இந்திய ரசிகர்கள் இன துவேஷத்துடன் கிண்டலடித்தார்கள் என்று ஆஸ்ட்ரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் குற்றம் சாற்றியது மிக ஆழமாக கவனிக்கப்பட வேண்டிய குற்றச்சாற்றாகும்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவோ, இந்திய ரசிகர்களுக்கு எதிராகவோ இது நாள் வரை யாரும் தெரிவிக்காத ஒரு குற்றச்சாற்றை ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் தெரிவித்துள்ளதும், அதனை ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பும் ஊதிப் பெரிதாக்கியுள்ளதும், சைமன்ட்ஸின் குற்றச்சாற்று குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கமளிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) கேட்டுக் கொண்டிருப்பதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தக்கதல்ல.

மைதானத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் வீரர்களை அவர்களின் காதுபட, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் சிலர் நகைச்சுவையுடன் ஏதாவது கூறுவது புதிதல்ல, என்றாலும் அவ்வாறு கூறப்படும் கருத்துக்கள் அல்லது கிண்டல் வார்த்தைகள் ஒரு ஆட்டக்காரரின் இனத்தைப் பற்றியதாகவோ அல்லது அவரது உடல்
அமைப்பை தொடர்பு படுத்துவதாகவோ இருந்தால் அது கண்டிக்கத்தக்கதே.

அகமதாபாத்தில் நடந்தது தொடர்பாக இதுவரை வெளியான செய்திகள் மற்றும் தகவல்களைக் கொண்டு பார்த்தால், ரசிகர் ஒருவர் சைமன்ட்ஸ் கவனிக்கும் போது அவரைப் பார்த்து குரங்கு சேஷ்டை என்று நாம் கூறுவோமே அப்படி முகத்தைச் சுளித்து சைகை செய்துள்ளார் என்பது தெரிகிறது. இதனை கண்டிக்கலாம். கண்டிக்கக்கூடியதே. ஆனால், இப்படிப்பட்ட சைகை எப்படி இன துவேஷம் (இன அடிப்படையில் சிறுமைபடுத்துவது) என்று கூறிட முடியும் என்பதே கேள்வி.

ஆனால், இது இன துவேஷ அடிப்படையிலான சைகையாகவே ஆஸ்ட்ரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் கருதுவாரேயானால், அது எப்படி இன துவேஷம் ஆகும் என்பதை அவர்தான் முதலில் விளக்க வேண்டும்.

படியுங்கள்… விவாதியுங்கள்